

இஸ்லமாபாத்,
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவை ஈரான் வழியாக பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்துக்குள் ஊடுருவி, சதியில் ஈடுபட்டதாக கூறி பாகிஸ்தான் போலீஸார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி கைது செய்தனர். இதை இந்தியா மறுத்தது. எனினும், இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடுத்தது. அதை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், குல்பூஷணுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது.
இதனிடையே, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, குல்பூஷன் ஜாதவை அவரது தாயாரும், மனைவியும் டிசம்பர் 25 (இன்று) ஆம் தேதி சந்தித்துப் பேசுவதற்கு பாகிஸ்தான் கடந்த 20-ஆம் தேதி விசா அளித்தது. இதையடுத்து, குல்பூஷண் ஜாதவைக் காண, அந்நாட்டுக்கு அவரது தாயாரும், மனைவியும் இன்று புறப்பட்டனர். ஐக்கிய அரபு அமீரகம் வழியாக விமானம் மூலமாக பாகிஸ்தானுக்கு அவர்கள் சென்றனர். குல்பூஷன் ஜாதவ் தனது குடும்பத்தினரை இன்று சந்திப்பதால் பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சந்திப்பு நடைபெற உள்ள தூதரகத்தை சுற்றிலும் துப்பாக்கிச்சூட்டில் பிரத்யேக பயிற்சி பெற்ற பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எந்த நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்பது குறித்தும், எவ்வளவு நேரம் நடைபெறும் என்பது குறித்தும் எந்த உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை. சந்திப்பு நடைபெறும் வெளியுறவு துறை அலுவலகத்தை சுற்றிலும் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி கொடுக்கப்படாது என பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. சந்திப்பு நடைபெறும் வெளியுறவு துறை அலுவலகம் அருகே பாகிஸ்தான் ஊடங்கள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களுடன் குழுமியுள்ளனர்.