பாகிஸ்தான்: வணிக வளாக தீ விபத்தில் 14 பேர் மரணம்; பலி உயரும் என அச்சம்

டிசம்பர் 2024-ல் குல் பிளாசா வணிக வளாகம் அருகே அமைந்த கட்டிடத்தில் திடீரென 2 தளங்களுக்கு தீ பரவியது.
கராச்சி,
பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற பெயரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு திடீரென இதில் தீ விபத்து ஏற்பட்டது. குல் பிளாசாவில் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் கடைகள் தரை தளத்தில் உள்ளன.
அவற்றில் முதலில் தீ பிடித்து கொண்டது. இதுதவிர, கட்டிடத்தின் 3 தளங்களிலும் தீ பரவியது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்தனர் என முதல்கட்ட தகவல் தெரிவித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார், விரைந்து சென்று உடல்களை மீட்டனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரு கடையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ பிடித்து, அது மளமளவென பல கடைகளுக்கும் பரவியுள்ளது என டி.ஐ.ஜி. சையது ஆசாத் ரசா தெரிவித்து உள்ளார். தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் 8 உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது. தீவிர போராட்டத்திற்கு பின்னர் நேற்றிரவே தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீப்பிடித்து, கரும்புகை பரவி அதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழந்து உள்ளனர்.
இதனால், மீட்பு குழுவாலும் உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. இதனால், தீ அணைக்கப்பட்ட பின்னர், உள்ளே சென்று பார்த்ததில், உடல் கருகிய நிலையில் 8 பேர் உயிரிழந்து கிடந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன.
எல்லா தளங்களிலும் மொத்தம் 1,200 கடைகள் கொண்ட இது பழைய கட்டிடம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனினும், 70 பேர் இன்னும் கட்டிடத்தில் சிக்கியிருக்கின்றனர் என ஊடக தகவல் தெரிவிக்கின்றது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.
இதே குல் பிளாசா வணிக வளாகம் அருகே அமைந்த கட்டிடத்தில் டிசம்பர் 2024-ல் திடீரென தீ 2 தளங்களுக்கு பரவியது. எனினும், உடனடியாக தீ அணைக்கப்பட்டது.






