

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவர் நகரில் இருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் 2 விமானிகள் இருந்தனர்.
பெஷாவர் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நடுவானில் திணறிய விமானம் அடுத்த சில நொடிகளில் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பயிற்சியின் போது விமானங்கள் விபத்துக்குள்ளாவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது. முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு ராவல்பிண்டி நகரில் ராணுவ விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.