

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) தலைவரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் இம்ரான் கானுக்கும் ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து உள்ளது.
இதனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது பதவியை இழக்கும் நிலையில் இருக்கிறார். இருப்பினும், ராணுவபுரட்சிக்கு சாத்தியமில்லை என கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவம் இம்ரானை மாற்றுவது பற்றி மட்டுமே யோசித்து வருகிறது.
நவம்பர் 20 ஆம் தேதி, லெப்டினன்ட் ஜெனரல் நதீம் அஞ்சும் டிஜியாக (ஐஎஸ்ஐ) பொறுப்பேற்கிறார். ஆனால் இம்ரான்கான் இன்னும் ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பைஸ் ஹமீதை ஆதரித்து வருகிறார்.
சிஎன்என் தகவலின் படி பாகிஸ்தான் இராணுவம் இம்ரான் கானுக்கு இரண்டு வாய்ப்புகளை வழங்கி உள்ளது: ஒன்று அவர் நவம்பர் 20 க்கு முன் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும். இரண்டிலும் இம்ரான்கான் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்படும்.
தற்போதைய ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் கூட்டணி கட்சிகளான முட்டாஹிதா குவாமி இயக்கம் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆகியவை தங்கள் ஆதரவை விலக்கி கொள்ள இருக்கின்றன.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியைச் சேர்ந்த பர்வேஸ் கட்டாக் மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர் பிரதமர் பதவிக்கு வர அதிக வாய்ப்புள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் மோசமான நிலையும் இம்ரான் கானின் அரசியல் செல்வாக்கை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.