

இஸ்லாமாபாத்,
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை விமானங்கள், பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை பின்னர் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இந்தியாவை சேர்ந்த ஒரு போர் விமானத்தை வீழ்த்திய பாகிஸ்தான் அதில் சென்ற அபிநந்தன் என்ற விமானியை சிறைபிடித்து பின்னர் விடுதலை செய்தது.
இந்த சம்பவங்களால் இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இந்திய உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 150 மீட்டர் தொலைவுக்கு வந்த அந்த உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய ராணுவ தரப்பில் இருந்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.