

காபூல்,
பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, பாகிஸ்தானில் உள்ள விமான நிலையங்கள், மசூதிகள், ராணுவ தளங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தலிபானின் கிளை அமைப்பான தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது.
இதையடுத்து ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படும் முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதனால் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. கடந்த வாரம் ஆப்கான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் வான் வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்கானிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டதாகவும் 12-க்கும் மேற்பட்ட ராணுவ முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், கொல்லப்பட்ட 23 பேரின் உடல்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் ஆப்கான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் அறி வித்துள்ளார்.
இதனை மறுத்துள்ள பாகிஸ்தான், தங்கள் தரப்பில் 2 வீரர்கள் மட்டுமே பலியானதாகவும், பதிலடித் தாக்குதலில் 133 ஆப்கான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள 2 ஆயிரத்து 611 கி.மீ நீளமுள்ள 'டியூரண்ட் லைன்' எல்லையை ஆப்கானிஸ்தான் இதுவரை அங்கீகரிக்கவில்லை. மேலும், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு ஆப்கான் அடைக்கலம் தருவதாக பாகிஸ்தானும், ஆப்கான் இறையாண்மையில் பாகிஸ்தான் தலையிடுவதாக ஆப்கானும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
இதற்கிடையில் இரு நாடுகளுக்கும் இடையே கத்தாரில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தநிலையில், தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இந்நிலையில் எல்லையில் மோதல்கள் காரணமாக பதட்டங்கள் அதிகரித்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் அனைத்து டிரோன் நடவடிக்கைகளுக்கும் பாகிஸ்தான் அரசி தடையை அறிவித்தது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வணிக மற்றும் தனியார் இயக்கப்படும் டிரோன்களுக்கும் தடை விதிக்கும் அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆப்கானிஸ்தான் மீது வெளிப்படையான போர் தொடுப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் வெளியிட்டிருந்த பதிவில், "பாகிஸ்தானின் பொறுமை எல்லை கடந்துவிட்டது. தற்போது நடப்பது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையிலான வெளிப்படையான போர்” என்று பதிவிட்டிருந்தார்.