

இஸ்லமாபாத்,
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக். கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி 29ஆம் தேதி அதிகாலை வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்த இந்திய ராணுவ சிறப்புப் படை வீரர்கள் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தினர்.
நள்ளிரவில் தொடங்கிய தாக்குதல் அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது. இந்தத் தாக்குதலில் அங்கிருந்த 7 பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து முதலில் மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், பின்பு ஒருவழியாக சமாளித்து இப்போது ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில், ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமுது குரேஷி, இந்தியா மீண்டும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய ஷா முகம்மது குரோஷி, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தகவலை சேகரித்துள்ளனர். இது ஒரு தீவிரமான விஷயம்" என்று கூறியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார்.