

கைபர் பக்துன்வா,
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்து, கவர்னர் ஆட்சியை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்பு தொடர்பான அரசியலமைப்பின் இரண்டு பிரிவுகளின் கீழ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியான 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப்' (PTI) நிர்வகித்து வரும் மாகாண அரசு நடைமுறையில் முடக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிபர் ஆசிப் அலி சர்தாரி சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தார். அமைச்சரவை உறுப்பினர்கள் நிலவரத்தை ஆய்வு செய்ததாகவும், "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து அந்த மாகாண அரசு வேண்டுமென்றே அலட்சியம் காட்டியதை" கவனத்தில் கொண்டதாகவும் ஷெரீப்பின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரநிலையின் போது மாகாண அரசின் அனைத்து செயல்பாடுகளையும் பாகிஸ்தான் அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள அந்நாட்டு அரசியலமைப்பு அனுமதிக்கிறது. இருப்பினும், அந்த மாகாணம் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பது குறித்து அதிபர் அலுவலகம் எதுவும் குறிப்பிடவில்லை.
இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் முதல்-அமைச்சர் சோஹைல் அப்ரிடி மற்றும் அக்கட்சியின் மாகாணத் தலைவர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தபோதிலும் நாடு முழுவதும் பரவலான செல்வாக்கை கொண்டுள்ள இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணி நடத்த பிடிஐ (PTI) கட்சி தயாராகி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.