பாகிஸ்தான், பயங்கரவாதிகளை உண்மையாக தண்டிக்க வேண்டும் - அமெரிக்கா கிடுக்கிப்பிடி

“ஹபீஸ் சயீத் 2001-ல் இருந்து 7 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இது வழக்கமான ஒன்று. பாகிஸ்தான், பயங்கரவாதிகளை உண்மையாக தண்டிக்க வேண்டும்” என்று அமெரிக்கா கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
பாகிஸ்தான், பயங்கரவாதிகளை உண்மையாக தண்டிக்க வேண்டும் - அமெரிக்கா கிடுக்கிப்பிடி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2017-ம் ஆண்டு டிரம்ப் பதவி ஏற்றார். அப்போது முதல் அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு நன்றாக இல்லை. பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரால் தங்களிடம் இருந்து பாகிஸ்தான் நிதி உதவி பெற்றுக்கொண்டு, தங்கள் சொந்த மண்ணில் இயங்கி வருகிற பயங்கரவாத அமைப்புகள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருதுகிறார். நம்புகிறார்.

அதன் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த பயங்கரவாத தடுப்பு நிதி உதவியை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை அமெரிக்கா அழைத்துள்ளது. அமெரிக்கா செல்கிற இம்ரான்கான் நாளை (திங்கட்கிழமை) வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது, தன் சொந்த மண்ணில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவது தொடர்பாக அவரிடம் டிரம்ப் கேள்விகள் எழுப்புவார்.

இதையொட்டித்தான், மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்துள்ளதாக நம்பப்படுகிறது. இதை நாடகமாகத்தான் இந்தியாவும் பார்க்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு கிடுக்கிப்பிடி போடுகிற வகையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். அவர் கூறியதாவது:-

வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதின் மூலம் பாகிஸ்தானுடனான உறவுகளை சரி செய்வதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான தனது கொள்கைளை பாகிஸ்தான் மாற்றிக்கொண்டால், இரு நாடுகள் இடையே ஒரு கூட்டை உருவாக்க முடியும் என்ற செய்தியை அந்த நாட்டுக்கு விடுக்கிறோம்.

பாகிஸ்தானுக்கு அளித்து வந்த பயங்கரவாத தடுப்பு நிதி உதவியை 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தற்போதைக்கு அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அந்த நாடு கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள ஆரம்ப நடவடிக்கையை (மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கைது உள்ளிட்ட) வைத்து மட்டும் பாகிஸ்தானை எடை போட்டு விட முடியாது. நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். பாகிஸ்தான் எடுக்கிற நடவடிக்கைகள் உறுதியானவையா, நீடித்து நிறக்கக்கூடியவைதானா என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் இறுதி மதிப்பீடு செய்யவில்லை. இப்போது எடுத்துள்ள நடவடிக்கைகளையெல்லாம் நாங்கள் ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். நாங்கள் நிலைத்து நிற்கத்தக்க உறுதியான நடவடிக்கைகளை எதிர்பார்க்கிறோமே தவிர பெயரளவிலான நடவடிக்கையை அல்ல.

ஹபீஸ் சயீத் கைது நடவடிக்கை பற்றி கேட்கிறீர்கள். இதில் நாங்கள் உறுதியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்.

2001-ம் ஆண்டில் இருந்து ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டிருப்பது இது 7-வது முறை. அவர் கைது செய்யப்படுவதும், பின்னர் விடுவிக்கப்படுவதும்தான் கடந்த காலத்தில் வழக்கமாக நடந்துள்ளது. நாங்கள் தெளிவான கண்களும், யதார்த்தமும் கொண்டவர்கள். இந்த மக்களை (ஹபீஸ் சயீத் போன்றவர்கள்) உண்மையாக தண்டிப்பதில் பாகிஸ்தான் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுப்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com