பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் மரியம் நவாஸ் ஜாமீனில் விடுதலை

சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் மரியம் நவாஸ் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள் மரியம் நவாஸ் ஜாமீனில் விடுதலை
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அல்-ஆசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக அவரை 8 வாரம் விடுதலை செய்து பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் அவர் லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நவாஸ் ஷெரீப்பின் மகள், மரியம் நவாஸ் மீது அவன்பீல்ட் ஊழல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கில் இருந்து மரியம் நவாஸ் ஜாமீனில் விடுதலையானார்.

அதனைத்தொடர்ந்து, சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் மரியம் நவாசை கைது செய்த போலீசார் லாகூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தை நவாஸ் ஷெரிப்பை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என லாகூர் உயர் நீதிமன்றத்தில் மரியம் நவாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவில் அவரை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதி அலி பக்கர் நஜாபி, மரியம் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com