

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சியின்போது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷெரீப், அவரது மகன் ஹஸ்மா ஷபாஸ், ஷபாஸ் ஷெரீப்பின் சகோதரரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தன.
அவர்கள் இந்த வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பித்து, வெளிநாடுகளில் அடைக்கலம் புகுவதை தடுக்கும் வகையில் ஷபாஸ் ஷெரீப், நவாஸ் ஷெரீப், ஹஸ்மா ஷபாஸ் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. இதனிடையே அண்மையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். அதே போல் அவரது மகன் ஹஸ்மா ஷபாஸ் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த சூழலில் கடந்த வாரம் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கும் பட்டியலை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சகத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கும் பட்டியலில் இருந்து பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினரான நவாஸ் ஷெரீப், ஹஸ்மா ஷபாஸ் மற்றும் மரியம் நவாஸ் உள்பட 4,863 பேரின் பெயர்கள் நீக்கப்படுவதாக உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா நேற்று அறிவித்தார்.
இதன்மூலம் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு செல்வதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.