

இஸ்லமாபாத்,
விண்வெளித்துறையில் வியத்தகு சாதனைகளை புரிந்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, விண்வெளித்துறையில் புதிய மைல் கல்லாக வரும் 2022 ஆம் அண்டு விண்ணுக்கு மனிதனை அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் வரும் 2022 ஆம் ஆண்டு முதல் தடவையாக விண்ணுக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டுள்ளது. சீனாவுடன் உதவியுடன் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக பாகிஸ்தான் தகவல் மந்திரி பவாத் சவூத்ரி நேற்று தெரிவித்தார். அடுத்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பெய்ஜிங் செல்ல உள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் பவாத் சவூத்ரி. மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்துக்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்து விட்டதாகவும், இதற்கான ஒப்பந்தமும் சீன நிறுவனத்துடன் கையெழுத்தாகி இருப்பதாகவும் பாகிஸ்தான் செய்தி இதழ் தி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது வரை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பி உள்ளன. இந்தியா தனது 75 சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தும் என்று இந்திய பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.