அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடன் பாகிஸ்தான் பிரதமர், ராணுவ தளபதி சந்திப்பு

இந்தியாவுக்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்து வருகிறார்.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறையாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது முதல் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால், டிரம்ப்பின் எச்சரிக்கையை இந்தியா நிராகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தார். மேலும், இந்தியாவுக்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்து வருகிறார்.
இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீர் அமெரிக்கா சென்றுள்ளனர். இருவரும் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் நேற்று சந்தித்தனர். வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு, சர்வதேச அரசியல் சூழ்நிலை, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து மூவரும் ஆலோசனை நடத்தினர். இந்தியாவுடனான உறவில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவது சர்வதேச அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






