

இஸ்லாமாபாத்,
மத்திய கிழக்கு போரில் அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது. அணுசக்தி திட்டங்கள், ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட விவகாரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும் கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவும், ஈரானும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன. இதனால் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
ஒப்பந்தம் இறுதியானவுடன், மின்னணு முறையில் இரு நாடுகளும் கையெழுத்திட பாகிஸ்தான் ஏற்பாடுகளைச் செய்யும். இதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் இரு தரப்புக்கும் இடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான அமெரிக்கா ஈரான் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வந்த பதற்றமான சூழல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.