50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மதுபான ஏற்றுமதியை தொடங்கியது பாகிஸ்தான்

பலுசிஸ்தான் மாகாணத்தில் பணியாற்றும் சீனர்களுக்காக மதுபானம் தயாரிக்க சீன நிறுவனத்திற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது.
50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மதுபான ஏற்றுமதியை தொடங்கியது பாகிஸ்தான்
Published on

கராச்சி,

பாகிஸ்தானில் உள்ள உள்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனமான ‘முர்ரி புரூவரி’ (Murree Brewery) சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளிநாடுகளுக்கு மதுபானங்களை ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் பெரும்பான்மை முஸ்லிம் மக்கள் மது அருந்துவதற்கு சுமார் 50 ஆண்டுகளாக தடை நீடித்து வரும் நிலையில், முர்ரி புரூவரி நிறுவனம் தனது பீர் மற்றும் பிற மதுபான வகைகளை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) இல்லாத நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஐக்கிய இங்கிலாந்து, ஜப்பான், போர்ச்சுகல், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு மதுபானங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் ஏற்றுமதி மேலாளர் ரமீஸ் ஷா தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனம் 1860-களில் பிரிட்டிஷ் வீரர்களுக்கு பீர் வழங்குவதற்காக எட்வர்ட் டயர் மற்றும் எட்வர்ட் வைம்பர் ஆகியோரால் முர்ரி மலைப்பகுதியில் இது தொடங்கப்பட்டது. 1977-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டோ, இஸ்லாமிய கட்சிகளின் அழுத்தத்தால் பாகிஸ்தானில் மதுபானத்திற்கு தடை விதித்தார். 2021-ஆம் ஆண்டு, பலுசிஸ்தான் மாகாணத்தில் பணியாற்றும் சீனர்களுக்காக மதுபானம் தயாரிக்க ஒரு சீன நிறுவனத்திற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, முர்ரி புரூவரி நிறுவனத்தின் தலைவரும், இஸ்பான்யார் பண்டாரா, மதுபான ஏற்றுமதிக்கான உரிமம் கோரி அழுத்தம் கொடுத்தார். இதன் விளைவாக, 2025-ஆம் ஆண்டு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை பாகிஸ்தான் அரசு வழங்கியது.

கடந்த சில ஆண்டுகளாக பழச்சாறுகள் மற்றும் மென்பானங்கள் மூலம் சுமார் 100 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ள இந்நிறுவனம், இப்போது மதுபான ஏற்றுமதியின் மூலம் அந்நியச் செலாவணியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. தடையற்ற விநியோகத்திற்காக பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் இந்நிறுவனம் முயற்சித்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com