

இஸ்லாமாபாத்,
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கிறது. இதற்கு பாகிஸ்தான் ஏற்கனவே கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசும்போது, இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் பொதுச்சபையில் எழுப்புவோம் என்று தெரிவித்தார்.
முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் காஷ்மீரில் இன அழிப்புக்கு இந்தியா திட்டமிடும் என அஞ்சுவதாக கூறிய இம்ரான்கான், அங்கிருந்து உள்ளூர் மக்களை வெளியேற்றிவிட்டு, பிற பகுதிகளை சேர்ந்தவர்களை குடியமர்த்தி பெரும்பான்மையினராக மாற்ற முயற்சி செய்யும் எனவும் கூறினார்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய தூதரை பாகிஸ்தான் வெளியேற்றியது. மேலும், இரு தரப்பு இடையேயான வர்த்தக உறவையும் முறித்துக்கொள்வதாக பாகிஸ்தான் நேற்று அறிவித்தது. இந்த நிலையில், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அதேபோல், வர்த்தக உறவையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த சூழலில், இந்தியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி பாகிஸ்தான் பரிசீலிக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகம்மது குரோஷி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக அரசியல் மற்றும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்கவே கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.