பாகிஸ்தான்: நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
Image Courtesy: ANI
Image Courtesy: ANI
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 9-ந்தேதி (நாளை) வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த 3-ந்தேதி ஓட்டெடுப்பு நடத்தாமல், துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார். அதையடுத்து இம்ரான்கான் பரிந்துரையால் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஆரிப் ஆல்வி கலைத்து உத்தரவிட்டார்.

இது அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியல் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. இதில் நேற்று தொடர்ந்து 4-வது நாளாக விசாரணை நடந்தது.

இந்த விசாரணை முடிவில் நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். அதாவது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் ஆரிப் ஆல்வியின் நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும், அது செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன் நாடாளுமன்றத்தை 9-ந்தேதி (நாளை) கூட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடுமாறு சபாநாயகர் ஆசாத் காசியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அன்று காலை 10 மணிக்கு இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

பிரதமருக்கு எதிரான இந்த தீர்மானம் வெற்றி பெற்றால், புதிய பிரதமரை நாடாளுமன்றம் நியமிக்கும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். இந்த தீர்ப்பை 5 நீதிபதிகளும் ஒருமனதாக வெளியிட்டனர்.

நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அதிபருக்கு பரிந்துரைக்க பிரதமருக்கு அதிகாரம் இல்லை எனக்கூறிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தனர்.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் கூறுகையில், துணை சபாநாயகர் காசிம் சூரி, இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த நடவடிக்கை, அரசியல் சாசனத்தின் 95-வது பிரிவை மீறிய செயல் என்பதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என கருத்து தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி தீர்ப்பு பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ள இம்ரான்கான் அரசு, நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் கவிழும் நிலை உறுதியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com