சமூக ஊடகங்களை நிரந்தரமாக தடை செய்யவேண்டும்.. பாகிஸ்தான் செனட் சபையில் தீர்மானம் தாக்கல்

உறுப்பினர் பஹ்ராமந்த் கான் டாங்கி கொண்டு வந்த தீர்மானம் மீது செனட் சபையில் நாளை விவாதம் நடத்தப்பட உள்ளது.
சமூக ஊடகங்களை நிரந்தரமாக தடை செய்யவேண்டும்.. பாகிஸ்தான் செனட் சபையில் தீர்மானம் தாக்கல்
Published on

இஸ்லாமாபாத்:

சமூக வலைத்தளங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் நிலையில், பாகிஸ்தானில் அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக செனட் சபை உறுப்பினர் பஹ்ராமந்த் கான் டாங்கி செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார். இளம் தலைமுறையினரின் எதிர்காலத்திற்கு கேடு விளைவிப்பதால், அனைத்து சமூக ஊடக தளங்களையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக டான் நியூஸ் தெரிவித்துள்ளது.

"இளம் தலைமுறையினரை சமூக ஊடக தளங்கள் மோசமாக பாதிக்கின்றன. நமது மதம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரான நடைமுறைகளை வளர்ப்பதற்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மொழி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

ராணுவத்திற்கு எதிரான எதிர்மறையான மற்றும் தீங்கிழைக்கும் பிரசாரத்தின் மூலம், நாட்டின் நலன்களுக்கு எதிராக இந்த தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து இளம் தலைமுறையைக் காப்பாற்றுவதற்கு பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் யூடியுப் ஆகியவற்றை தடை செய்யும்படி இந்த செனட் சபை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்" என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஹ்ராமந்த் கான் டாங்கி கொண்டு வந்த தீர்மானம் மீது செனட் சபையில் நாளை விவாதம் நடத்தப்பட உள்ளது.

பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலை தாமதப்படுத்த கோரி செனட்டர் பஹ்ராமந்த் கான் டாங்கி இதற்கு முன்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். வரும் 11-ம் தேதி அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. 

பாகிஸ்தானில் பிப்ரவரி 17-ம் தேதி முதல் எக்ஸ் தளம் பெரும்பாலும் செயல்படாமலேயே உள்ளது. குறிப்பாக தேர்தலில் மோசடி நடந்ததாக முன்னாள் கமிஷனர் ராவல்பிண்டி லியாகத் அலி சட்டா, ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபிறகு எக்ஸ் தளம் செயல்படாமல் உள்ளது. இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக சமூக ஊடக தளங்களுக்கு தடை கோரி செனட் சபையில் தீர்மானம் கொண்டு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, அனைத்து வி.பி.என். இணைப்புகளுக்கும் தடை விதிக்க அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே நாடு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கை பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com