சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கும் வகையில், வெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி
Published on

இஸ்லாமாபாத்,

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக அவருக்காக ஜாமீன் வழங்கப்பட்டது. கவலைக்கிடமான நிலையில் 2 வாரங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் அவரது உடல்நலம் சற்று தேறியதும், லாகூரின் ஜதி உம்ராவில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள அனைத்து மருத்துவ வசதிகளையும் பயன்படுத்தி நவாஸ் ஷெரீப்புக்கு சிகிச்சை அளித்துப் பார்த்துவிட்டதாகவும், அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பதுதான் ஒரே வழி என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், நவாஸ் ஷெரீப் வெளிநாடு செல்ல தடை இருப்பதால் அதற்கு அனுமதி கோரி அவரது குடும்பத்தினர் அரசிடம் விண்ணப்பித்தனர்.

அதனை பரிசீலித்த பாகிஸ்தான் அரசு அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது. இதற்காக, நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்ட நபர்கள் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கப்பட்டது. இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com