

லாகூர்,
கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுடனான வர்த்தகம் நிறுத்தப்பட்டதன் காரணமாக, பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3.3 லட்சம் கோடி (40 பில்லியன் அமெரிக்க டாலர்) வரை பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் - இந்தியா வர்த்தக கவுன்சில் தலைவர் நூர் முகமது கசூரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 40-க்கும் மேற்பட்ட இந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான வர்த்தக உறவை இந்தியா அதிரடியாக நிறுத்தியது.
இது குறித்து லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய நூர் முகமது கசூரி, வர்த்தகத் தடையால் பாகிஸ்தான் வணிகர்கள் சந்தித்த கடுமையான சவால்களை பட்டியலிட்டார்.
சர்க்கரை, உரம், சிமெண்ட், பெட்ரோலிய பொருட்கள், இரும்பு மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை மிக அருகில் இருக்கும் இந்தியாவிடமிருந்து வாங்க முடியாமல், பிரேசில், சீனா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.
தூரத்து நாடுகளிலிருந்து பொருட்களை கொண்டு வருவதால், போக்குவரத்து மற்றும் சரக்கு கப்பல் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. இது உள்நாட்டில் கடுமையான விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.
இந்தியாவிலிருந்து மருந்து பொருட்களுக்கான மூலப்பொருட்களை நேரடியாக வாங்கினால், பாகிஸ்தான் மருந்து துறை மட்டும் ஆண்டுக்கு 2 முதல் 3 பில்லியன் டாலர் வரை சேமிக்க முடியும் என்று கசூரி சுட்டிக்காட்டினார்.
ஒரே மாதிரியான வரலாறு, கலாச்சாரம் மற்றும் குடும்ப உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் இரு நாடுகளும், தங்களுக்குள் வர்த்தகத்தை மீண்டும் தொடங்கினால் இரு நாட்டு வணிகங்களுக்கும் பெரும் நன்மை கிடைக்கும் என்றும், இதுவே பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.