இந்தியா அழித்த பயங்கரவாத தளங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா அழித்த பயங்கரவாத தளங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா அழித்த பயங்கரவாத தளங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பாகிஸ்தான்
Published on

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் ஆவர்.இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்பட அந்த நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள பயங்கரவாத நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டன.

இந்தியாவின் அதிரடியை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை தாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே நீடித்த மோதல் 4 நாட்களுக்குப்பின் முடிவுக்கு வந்தது.இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இந்தியா அழித்த பயங்கரவாத நிலைகளை அந்த நாடு மீண்டும் கட்டியெழுப்பி வருவது தெரியவந்துள்ளது.இந்திய உளவுத்துறை அதிகாரிகள் இதை கண்டுபிடித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்தவகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டை ஒட்டி இந்த தளங்களை அமைத்து வருவதாக அதில் கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே இருந்த இடங்களிலும், புதிதாக பல இடங்களிலும் இந்த தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காகவும், எதிர்கால தாக்குதலுக்காகவும் எல்லையோரம் உள்ள காட்டுப்பகுதிகளில் இந்த தளங்களை கட்டி வருகிறது.அது மட்டுமின்றி ரேடார், செயற்கைக்கோள் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக உயர்மட்ட தொழில்நுட்பத்துடனும் அமைக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டு உள்ளது.எதிர்காலத்தில் ஏதேனும் தாக்குதல் நடந்தால் பாதிப்புகளை குறைப்பதற்காக சிறுசிறு முகாம்களாக அவை அமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 200-க்கும் குறைவான பயங்கரவாதிகள் தங்கும் வகையில் அந்த தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த முகாம்கள் அனைத்தும் சிறப்பாக பயிற்சி பெற்ற ராணுவ குழுக்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் வெப்ப அறிதல் கருவிகள் மற்றும் டிரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட மேம்பட்ட கண்காணிப்பு கருவிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்கள் வழங்கிய நிதியை, இந்த பயங்கரவாத தளங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது.இந்தியா அழித்த பயங்கரவாத தளங்களை பாகிஸ்தான் மீண்டும் கட்டியெழுப்பி வருவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com