15 ஆண்டுகளுக்கு பிறகு பயங்கரவாத நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்

ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீதான தாக்குதல் இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு பிறகு பயங்கரவாத நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு முதலிடம்
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாக கொண்ட சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் இயங்கி வருகிறது. நியூயார்க், பிரசெல்ஸ், மெக்சிகோ சிட்டி, ஹரேரே உள்ளிட்டவற்றில் நிறுவனங்களை அமைத்து உலகப் பயங்கரவாதக் குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது.

உலகின் மக்கள் தொகையில் 99.7 சதவீதத்தை உள்ளடக்கிய 163 நாடு களில் பயங்கரவாதத்தின் தாக்கத்தை ஆய்வு செய்யும் விரிவான ஆய்வாக இது உள்ளது. 2026-ம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு பட்டியலை இந்த நிறுவனம் நேற்று வெளியிட்டது. இதில் 2011-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, புர்க்கினா பாசோவை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் இந்த இடத்தைப் பெற்றுள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்து முக்கிய தகவல்கள் அதில் இடம் பெற்றுள்ளன. அதில் கடந்த 2025-ம் ஆண்டில் 1,139 பேர் பயங்கரவாதத்தால் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் அதிகமாகும்.

கடந்த ஆண்டில் மொத்தம் 1,045 பிணைக் கைதிகள் பிடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இது 2024-ல் 101 ஆக இருந் தது. 2025-ல் 655 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீதான தாக்குதல் இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகவும் ஆபத்தான குழுவாகக் தெக்ரீக்-இ-தலீபான் உருவெடுத்துள்ளது. 2025-ல் பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத உயிரிழப்புகளில் 56 சதவீதம் இக்குழுவினாலேயே ஏற்பட்டுள்ளது. அதனுடன் இணைந்து பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பும் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு உருவான சூழலும், எல்லை தாண்டிய பதற்றங்களும் இந்த குழுக்களின் எழுச்சிக்குக் காரணமாகக் கருதப்படுகின்றன. இந்த பட்டியலில் இந்தியாவின் நிலை முன்னேற்றமடைந்து 13-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com