

லாகூர்,
பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு ரஹ்மான் பாபா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயிலில் நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் முல்தான் நகர் அருகே ஷெர் ஷா என்ற பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் பயணித்தபோது ரெயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இந்த விபத்தில் ரெயிலில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.