"இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.." - பாகிஸ்தான் பிரதமர்


இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.. -  பாகிஸ்தான் பிரதமர்
x

கோப்புப்படம்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து, மே 7ம் தேதியன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தைத் தொடங்கியது. மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தி வைத்தது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதை நிறுத்தும் வரை சிந்து ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் , பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்த பாகிஸ்தானை உலகிற்கு இந்தியா அம்பலப்படுத்தியது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) கூட்டத்தில், பாகிஸ்தான் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தில் மூழ்கியிருப்பதாக இந்தியா விவரித்தது. மேலும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF)-ஐ அமெரிக்கா சமீபத்தில் தடை செய்தது. ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, டி.ஆர்.எப்க்கு பயங்கரவாத அமைப்பின் அந்தஸ்து வழங்குவதற்கு போதுமான ஆதாரங்களை இந்தியா அமெரிக்காவிடம் வழங்கி இருந்தது.

இந்த சூழலில் பாகிஸ்தானுக்கான இங்கிலாந்து தூதர் ஜேன் மாரியோட் நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பை சந்தித்து பேசினார். அப்போது இருவரும் பிராந்திய நிலவரம் குறித்து விவாதித்தனர். அப்போது இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தை தணிக்க உதவியதற்காக இங்கிலாந்துக்கு ஷெரீப் நன்றி கூறினார். அதேநேரம் இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சினைகள் தொடர்பாகவும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புவதாகவும் அவரிடம் ஷெரீப் கூறினார்.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து ஏற்கனவே பலமுறை பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப்பெறுவது மற்றும் பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேச முடியும் என இந்தியா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story