சீன விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பாகிஸ்தான் வீரர்

விண்வெளி நிலையத்தில் உள்ள ஆய்வு கருவிகளில் சோதனைகளை மேற்கொள்ளும் ‘அறிவியல் ஆய்வு நிபுணராக பாகிஸ்தான் வீரர் செயல்படுவார்.
சீன விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பாகிஸ்தான் வீரர்
சீனா விண்வெளி
Published on: 

பெய்ஜிங்,

சீனா விண்வெளியில் அமைத்துள்ள சொந்த விண்வெளி நிலையத்திற்கு முதன்முறையாக வெளிநாட்டு வீரர் ஒருவர் செல்ல உள்ளார். இதில் பாகிஸ்தானை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர் பங்கேற்க இருப்பது சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தியாங்காங் விண்வெளி நிலையம்

உலக அளவில் விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக திகழும் சீனா, விண்வெளியில் ‘தியாங்காங்’ என்ற பெயரில் சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையமான ‘ஐ.எஸ்.எஸ்.’ திட்டத்தில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவிற்கு போட்டியாக சீனா இந்த நிலையத்தை உருவாக்கியது.

வெளிநாட்டு வீரர்கள்

தற்போது இந்த விண்வெளி நிலையத்திற்கு வெளிநாட்டு வீரர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீனாவும், பாகிஸ்தானும் முக்கிய ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி சீனாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

பெய்ஜிங்கில் தீவிர பயிற்சி

இந்த பயணத்திற்காக பாகிஸ்தானை சேர்ந்த ஜீஷன் அலி மற்றும் குர்ரம் தாவூத் ஆகிய 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பெய்ஜிங்கில் உள்ள சீன விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் பல மாதங்களாக தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

விண்வெளி பயணம்

இவர்களில் ஒருவர் மட்டுமே விண்வெளி பயணத்திற்கு இறுதி செய்யப்படுவார் என்றும், மற்றொருவர் மாற்று வீரராக (பேக்-அப்) செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இருவரில் விண்வெளிக்கு பறக்க போகும் அந்த வீரர் யார்? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆய்வு பணிகளில் ஈடுபடுவார்

இந்த பயணத்தின்போது பாகிஸ்தான் வீரர் விண்கலத்தை இயக்கும் விமானியாக செயல்பட மாட்டார். மாறாக, விண்வெளி நிலையத்தில் உள்ள ஆய்வு கருவிகளில் சோதனைகளை மேற்கொள்ளும் ‘அறிவியல் ஆய்வு நிபுணராக’ (பேலோடு நிபுணர்) செயல்படுவார்.

ஆண்டு இறுதியில் பயணம்

இந்த விண்வெளி பயணம் 2026-ம் ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆய்வை முடித்துவிட்டு பத்திரமாக பூமிக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. விண்வெளி துறையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் சீனாவின் அடுத்தகட்ட நகர்வாகவே பாகிஸ்தான் வீரரை விண்வெளிக்கு அனுப்பும் இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

X