

இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில், கல்வி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி பாவத் சவுத்ரி கலந்து கொண்டு பேசினார். அப்போது நாட்டில் அதிகரித்து வரும் பயங்கரவாதம் குறித்து பேசிய அவர் 90களில், பயங்கரவாதத்தை போதிக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பயங்கரவாதம் வளர்வதற்கு பள்ளி, கல்லூரிகளே முக்கிய காரணமாக உள்ளன என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் ஒரு நாட்டை தனிமைப்படுத்தி அழிக்கக்கூடிய ஒன்றாகும். துரதிர்ஷ்டவசமாக, அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை காரணங்களால் பாகிஸ்தான் அதை நோக்கி தள்ளப்பட்டது. பாகிஸ்தான், உள்ளிருந்து மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறது எனவும் கூறினார்.
இதனிடையே பயங்கரவாதத்துக்கு பள்ளிகளே காரணம் என மந்திரி பேசியது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாவத் சவுத்ரிக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.