இம்ரான்கான் கட்சியின் நிதி மோசடி: தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு

தேர்தல் கமிஷன், மனுதாரருக்கு ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டு இருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி ரகசிய கணக்குகள் மூலமாக வெளிநாட்டினரிடம் இருந்தும், நிறுவனங்களிடம் இருந்தும் முறைகேடாக பணம் வசூலிப்பதாகவும், ஊழல் பணத்தை பதுக்கவும் செய்வதாகவும் புகார்கள் எழுந்து அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இது தொடர்பான புகாரின் பேரில் அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்துகிறது. இம்ரான்கான் கட்சி 2009-10 முதல் 2012-13 வரையில் ரூ.312 மில்லியன் வரவை குறைத்துக்காட்டி உள்ளது, 2012-13 ஆண்டில் மட்டுமே ரூ.145 மில்லியனுக்கும் அதிகமான தொகையைக் குறைத்து காட்டி உள்ளது என்று தேர்தல் கமிஷனின் ஆய்வுக்குழு கண்டுபிடித்தது. இது தொடர்பான ஆவணங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் பாகிஸ்தான் தலைமை தேர்தல் கமிஷனர் சிக்கந்தர்சுல்தான் ராஜா நேற்று முன்தினம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் தேர்தல் கமிஷனில் இந்த வழக்கை தொடுத்து, இம்ரான்கான் கட்சி மீது விசாரணை நடத்த வழிவகுத்த மனுதாரரான அக்பர் பாபருக்கு, ரசியமாக வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஆவணங்களை வழங்க இம்ரான்கான் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இப்போது தேர்தல் கமிஷன், மனுதாரருக்கு ஆவணங்களை வெளியிட உத்தரவிட்டு இருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் இது இம்ரான்கான் கட்சியின் ஊழலை உலகுக்கு அடையாளம் காட்டுவதாக அமையும். மேலும், இது இம்ரான்கான் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்க துணை நிற்கும்.

இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த விவகாரத்தில் இம்ரான்கான் கட்சிக்கு எதிராக திரும்பி இருக்கிற அக்பர் பாபர், இம்ரான்கான் கட்சியின் நிறுவன உறுப்பினர் என்பதுதான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com