போர் பதற்றம்.. உளவுப்பிரிவு தலைவரை பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தானின் 10-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது ஆசிம் மாலிக் ஆவார்.
இஸ்லாமாபாத்,
காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால், இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கும் என அந்த நாட்டு மந்திரிகளே அலறி வருகின்றனர்.
இந்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காலியாக இருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணியிடத்திற்கான இடத்தை பாகிஸ்தான் நிரப்பி உள்ளது.
இதன்படி பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அந்த நாட்டு உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது ஆசிம் மாலிக் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் உடனடியாக இந்த கூடுதல் பொறுப்பையும் ஏற்பார் என மந்திரிசபை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானின் 10-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகமது ஆசிம் மாலிக் ஆவார். அதேநேரம் ஐ.எஸ்.ஐ. தலைவராக பணியாற்றி வரும் ஒருவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஒரே நேரத்தில் இரு முக்கிய பொறுப்புகளை வகிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுப்பதற்கு உளவுப்பிரிவு அமைப்பு தலைவரின் வழிகாட்டுதல் உதவும் என்ற அடிப்படையில் இந்த நியமனத்தை செய்திருப்பதாக தெரிகிறது.






