பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு- 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் ஆரிப் ஆல்வி அறிவிப்பு

நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி ஏற்றுக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு- 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என அதிபர் ஆரிப் ஆல்வி அறிவிப்பு
Published on

இஸ்லமபாத்,

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தன.

இம்ரான்கானுக்கு பெரும்பான்மை இல்லாததால், அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்தன. இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்த நிலையில், அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் காசின் கான் நிராகரித்தார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தின.

இதற்கு மத்தியில், நாடாளுமன்றத்திற்கு வராமல் தனது வீட்டில் இருந்தபடி உரையாற்றிய இம்ரான் கான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்விக்கு கோரிக்கை விடுத்தார். தனது ஆட்சியை கலைக்க வெளிநாட்டு சதி இருப்பதால் ஆட்சியை கலைக்க வேண்டும். யார் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என்று இம்ரான் கான் பேசியிருந்தார்.

பாகிஸ்தான் அரசியலில் ஏற்பட்ட அடுத்தடுத்த நகர்வுகள் அந்நாட்டில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைப்பதாக பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தான் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com