

இஸ்லாமாபாத்
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்பவே பாகிஸ்தானிடம் வலியுறுத்தினோம். மேலும் பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என் மத்திய அரசு கூறி உள்ளது.
அபிநந்தனை சந்திக்க இந்திய தூதரை அனுமதிக்க வேண்டும் என இந்தியா கோரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
ஜெனீவா ஒப்பந்தப்படி இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் நடத்தவில்லை. இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தவே பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. பாகிஸ்தான் ராணுவ ஆதரவுடன் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இயங்குகிறது. பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறியதாவது:-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசுவதற்கு தயாராக உள்ளார். மோடி தயாராக இருக்கிறாரா?
ஒவ்வொரு நகர்விற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்கள் சமாதானத்திற்கு முன்னுரிமை அளித்தால், நாங்கள் சமாதானத்திற்கு தயாராக இருக்கிறோம். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை என்றால், நாங்கள் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.
உண்மையில் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? நீங்கள் அரசியலுக்காக பிராந்திய ஸ்திரத்தன்மையைத் கெடுக்க விரும்புகிறீர்களா?
நீங்கள் அப்பாவி உயிர்களை வீணடிக்க வேண்டுமா? இது ஒரு புத்திசாலித்தனமான செயல் அல்ல. இது ராஜதந்திரமும் அல்ல என கூறினார்.