5 ஆண்டுகளுக்குப் பிறகு... பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இன்று சந்திப்பு

'பிரிக்ஸ்' நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று ரஷியா சென்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மாஸ்கோ,

இந்தியா-ரஷியா இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது, போர்க்களத்தில் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று புதினிடம் தெரிவித்தார். அமைதி வழியில் தீர்வு காணுமாறு வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். ரஷியாவும், உக்ரைனும் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே 'பிரிக்ஸ்' கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு, ரஷியாவில் உள்ள கசான் நகரில் நடக்கிறது. இது 3 நாள் மாநாடு ஆகும். 'பிரிக்ஸ்' கூட்டமைப்பில், இந்தியா, ரஷியா, சீனா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஈரான், எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலகளாவிய வளர்ச்சி, பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகிய கருப்பொருளை மையமாக வைத்து இந்த மாநாடு நடக்கிறது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி நேற்று காலை தனி விமானம் மூலம் ரஷியா புறப்பட்டார். அவர் அங்கு செல்வது, இந்த ஆண்டில் இது 2-வது தடவை ஆகும். நேற்று பிற்பகலில் அவர் கசான் நகருக்கு போய்ச் சேர்ந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்பிறகு, அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். இருவருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ரஷியா-உக்ரைன் போர் விவகாரம், முக்கிய இடம்பிடித்ததாக தெரிகிறது. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, போரை முடிவுக்கு கொண்டுவர உதவுவதாக தெரிவித்தார்.

இந்த சூழலில்சீன அதிபர் ஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோரும் நேற்று கசான் நகருக்கு வந்து சேர்ந்தனர். இதற்கிடையே ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். கடந்த ஜூலை மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகியுள்ள மசூத்தை மோடி சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும்.

இந்நிலையில் 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்க ரஷியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்-உடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஷ்ரி தெரிவித்துள்ளார்.

2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப் பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு என்பதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த சந்திப்பின்போது எல்லைப் பகுதியில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com