உக்ரைன் போர் குறித்து பேசும்போது கண்ணீர் விட்டு அழுத போப் ஆண்டவர்

சிறப்பு பிரார்த்தனையில் உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் ஆண்டவர் கண்ணீர் விட்டு அழுதார்.
உக்ரைன் போர் குறித்து பேசும்போது கண்ணீர் விட்டு அழுத போப் ஆண்டவர்
Published on

ரோம்,

உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் வருடாந்திர கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

அதை தொடர்ந்து, உரையாற்றிய போப் ஆண்டவர் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும்போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் தன்னை தானே தேற்றிக்கொண்டு தொடர்ந்து பேசினார்.

அப்போது அவர், "உக்ரைன் மக்கள் அமைதிக்காக நாங்கள் நீண்டகாலமாக இறைவனிடம் கேட்டோம். தற்போது, அந்தத் தியாக பூமியின் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள், அப்பாக்கள் மற்றும் இளைஞர்கள் என மிகவும் துன்பப்படுகிறவர்களின் வேண்டுகோளை நான் உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன்" என்றார்.

இதனிடையே உக்ரைன் போர் குறித்து பேசும்போது போப் ஆண்டவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com