போர் பதற்றம்; மகனின் திருமணம் ஒத்திவைப்பு - கவலை தெரிவித்த நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு

மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது போருக்காக கொடுத்த விலை என்று நெதன்யாகு தெரிவித்தார்.
போர் பதற்றம்; மகனின் திருமணம் ஒத்திவைப்பு - கவலை தெரிவித்த நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு
Published on

ஜெருசலேம்,

ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த 13-ந்தேதி 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

அதேநேரம் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்திருப்பதாக தெரிவித்த ஈரான் அரசு, இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையை தொடங்கியது. இதன்படி இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் நடத்திய தாக்குதல்களால் இஸ்ரேலில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் ஈரானில் இதுவரை 263 பொதுமக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக கடந்த 16-ந்தேதி நடைபெற இருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகுவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக காசாவில் இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகளாக உள்ள நிலையில், நாட்டின் பிரதமர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக நெதன்யாகு மகனின் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்ட சொரோகா மருத்துவமனையை பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் பேட்டியளித்த அவர், "பலர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்து வாடுகின்றனர். நாம் அனைவரும் இழப்புகளை சந்தித்துள்ளோம். எனது குடும்பமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனது மகனின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அது போருக்காக நாங்கள் கொடுத்த விலையாகும். இதனால் எனது குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீராங்கனையை போல் எனது மனைவி இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொண்டார்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், நெதன்யாகுவின் பேச்சுக்கு இஸ்ரேல் மக்கள் சிலர் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போரின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நெதன்யாகு தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்று பலர் விமர்சித்துள்ளனர். இது குறித்து ஜனநாயக கட்சி உறுப்பினர் கிலாட் காரிவ் கூறுகையில், "இனி ஒருபோதும் திருமண நிகழ்ச்சியை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பல குடும்பங்களை எனக்கு தெரியும். நெதன்யாகு ஒரு இரக்கமற்ற நபர். இரவுப் பணிக்காக தங்கள் வீடுகளை விட்டுச் செல்லும் மருத்துவர்களும், போருக்கு நடுவே குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களும்தான் வீரர், வீராங்கனைகள்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com