

சிங்கப்பூர்,
பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு ஷாங்க்ரிலா பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. அதில், பல்வேறு உலக நாடுகளின் ராணுவ மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, ஆசியபசிபிக் பாதுகாப்பு பற்றி விவாதித்தனர்.
அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தோபசிபிக் பிராந்திய நிகழ்வுகளில்தான், உலகத்தின் தலைவிதி அடங்கி இருக்கிறது. மோதல் நிறைந்த ஆசியா, நம்மை பின்னுக்கு தள்ளி விடும். ஒத்துழைப்பு நிறைந்த ஆசியா, இந்த நூற்றாண்டை வடிவமைக்கும்.
அளவு, பலம் ஆகியவற்றில் பாரபட்சம் இல்லாமல், அனைத்து நாடுகளிடமும் சமத்துவம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். கடல் வணிகத்தில் சுதந்திரமான போக்கு நிலவ வேண்டும். வானத்திலும், கடலிலும் உள்ள பொதுவெளிகளில் பாரபட்சமின்றி அனைவரும் பலன் அடைய அனுமதிக்கப்பட வேண்டும். இதன்மூலம், கடல் வழிகள், வளத்துக்கான பாதைகளாக மாறும். கடல்சார் குற்றங்களையும் தடுக்க முடியும்.
இந்தியாவும், சீனாவும் பிரச்சினைகளை கையாள்வதில் முதிர்ச்சியை கடைபிடித்து வருகின்றன. இரு நாடுகளும் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் நாடுகள். எனவே, போட்டி நிலவுவது இயல்புதான். ஆனால், இந்த போட்டி, மோதலாக மாறிவிடக்கூடாது. வேறுபாடுகள், சச்சரவுகளாக மாற அனுமதிக்கக்கூடாது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 7.5 சதவீதம் முதல் 8 சதவீதமாக நீடிக்கும் என்று நம்புகிறோம். பொருளாதாரத்தால் மட்டுமின்றி, உலகளாவிய தொடர்புகளாலும்தான், மக்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இது, நாட்டின் 80 கோடி இளைஞர்களுக்கும் தெரியும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.