

முஷாபராபாத்
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சி.ஆ.ர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை சதி திட்டம் தீட்டி செயல்படுத்திய முக்கிய பயங்கரவாதியாக அறியப்படுபவர் ஹம்சா புர்ஹான். அல்-பத்ர இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முஷாபராபாத் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சுட்டு கொன்றுள்ளனர்.
அவருடைய உடலில் பல்வேறு இடங்களில் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்துள்ளன. புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் புர்ஹானின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
எல்லைக்கு வெளியே இருந்து கொண்டு, காஷ்மீரில் பல்வேறு பெரிய பயங்கரவாத தாக்குதல்களை அவர் நடத்தியுள்ளார். இதற்கு உள்ளூர் நெட்வொர்க்கை பயன்படுத்தி வந்துள்ளார்.
பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட நகரங்களில், லஷ்கர்-இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்களின் உறுப்பினர்கள் பலர் அடுத்தடுத்து மர்ம நபர்களால் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் கொல்லப்பட்டு உள்ளார். இதுபற்றி முஷாபராபாத் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.