ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல்; மும்மடங்கு அதிகரித்த இந்தியா

ரஷிய எண்ணெய் கொள்முதலுக்கு அமெரிக்கா இந்தியாவுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கியது
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல்; மும்மடங்கு அதிகரித்த இந்தியா
Published on

ரஷியா-உக்ரைன் போர் வெடித்ததையடுத்து, ரஷியாவுக்கு மேலை நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தன. இதனால் ரஷிய கச்சா எண்ணெயை பல நாடுகள் வாங்க தயக்கம் காட்டின. அதனால், ரஷியா தள்ளுபடி விலையில் எண்ணெயை வழங்க முன்வந்தது. இதன் பின்னர், சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷிய கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உயர்ந்தது.

ஆனால், ரஷிய எண்ணெய் வாங்கியதற்காக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தது. இதன் தாக்கமாக, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய எண்ணெய் கொள்முதலை தற்காலிகமாக குறைத்தன.

இதன் விளைவாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி கணிசமாக குறைந்தது. அந்த மாதத்தில் 140 கோடி யூரோ (இந்திய மதிப்பில் ரூ.12,160 கோடி) மதிப்புள்ள எண்ணெயை மட்டுமே இந்தியா வாங்கியது. இதனால், ரஷிய எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 2-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு சரிந்தது. அந்த இடத்தை துருக்கி பிடித்தது.

இந்நிலையில், ரஷிய எண்ணெய் கொள்முதலுக்கு அமெரிக்கா இந்தியாவுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கியது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, மார்ச் மாதத்தில் அரசு மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீண்டும் அதிக அளவில் ரஷிய எண்ணெயை வாங்கின.

இதன் காரணமாக, மார்ச் மாதத்தில் 530 கோடி யூரோ (இந்திய மதிப்பில் ரூ.57,770 கோடி) மதிப்புள்ள ரஷிய கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது. இது பிப்ரவரி மாதத்தை விட மூன்றரை மடங்கு அதிகமாகும். இதன் மூலம், ரஷிய எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவலை ‘ஆராய்ச்சி மற்றும் தூய்மையான காற்றுக்கான மையம்’ என்ற ஐரோப்பிய அமைப்பு வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com