

அஸ்டனா,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 234-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன.
போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது.
இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் - ரஷியா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, போரில் தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் போரின் போக்கு 3-ம் உலகப்போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கஜகஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷியா - மத்திய ஆசிய நாடுகள் இடையே நடைபெறும் மாநாட்டில் புதின் பங்கேற்கிறார். இம்மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களும் பங்கேற்கிறார்.
முன்னதாக ரஷிய அதிபர் புதின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, உக்ரைன் விவகாரத்தில் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டுமென சீனாவும், இந்தியாவும் தொடர்ந்து கூறி வருகின்றன. அவர்களின் நிலைப்பாடு எங்களுக்கு தெரிகிறது. இந்தியாவும் சீனாவும் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள். அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம்' என்றார்.
உக்ரைன் விவகாரத்தில் ராஜாங்க ரீதியில் மற்றும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என ரஷியா மற்றும் உக்ரைனை இந்தியா தொடந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.