மந்திரியை ராஜபக்சே ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் கொழும்பு நகரில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

இலங்கையில் மந்திரியை ராஜபக்சே ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் ஒருவர் பலியானார்.
மந்திரியை ராஜபக்சே ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் கொழும்பு நகரில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி
Published on

கொழும்பு,

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.

இந்த நிலையில் 26-ந் தேதி அதிரடி திருப்பமாக ரனில் விக்ரமசிங்கேயை பிரதமர் பதவியில் இருந்து சிறிசேனா நீக்கினார். புதிய பிரதமராக ராஜபக்சேயை நியமித்து உத்தரவிட்டார். அவரும் உடனே பதவி ஏற்றார்.

ரனில் விக்ரமசிங்கேயைப் பொறுத்தமட்டில் நான்தான் பிரதமர் என்று அறிவித்து விட்டு, பிரதமர் மாளிகையை விட்டு வெளியேற மறுத்து விட்டார், நாடாளுமன்ற சபாநாயகரும் அவரைத்தான் பிரதமராக அங்கீகரித்து இருக்கிறார். ஆனால் ராஜபக்சேயும் பிரதமராக பதவி ஏற்று இருக்கிறார். ஒரே நேரத்தில் 2 பிரதமர்கள் என்று சொல்கிற வகையில் அங்கு அரசியல் குழப்பம் நிலவுகிறது.

இந்த நிலையில், ரனில் விக்ரமசிங்கேயின் தீவிர ஆதரவாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான பெட்ரோலிய துறை மந்திரி அர்ஜுனா ரணதுங்கா, கொழும்பு நகரில் உள்ள சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசன் அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அப்போது அவரை தடுத்தவாறு, சிறிசேனாவின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். அத்துடன் அவருக்கு எதிராக கோஷங்களை முழங்கினர்.

இதனால் பரபரப்பான சூழல் உருவானது. அப்போது, ரணதுங்காவின் பாதுகாவலர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சிக்கி படுகாயம் அடைந்ததனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஞ்சிய 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடந்த சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசன் அலுவலக பகுதியில் பதற்றம் நிலவியதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களுடன் ராஜபக்சே ஆதரவாளர்களும் குவிந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com