

ரஷ்யா,
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், இரவு வானத்தில் 4 நிலவுகள் பிரகாசிப்பது போன்ற ஒரு காட்சியை கண்டு மக்கள் திகைத்துப் போனார்கள். இந்த அரிய காட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காணப்பட்டது. அதன் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
இந்த வியக்க வைக்கும் காட்சி பாராசெலினே (paraselenae) என்று அழைக்கப்படுகிறது, இது ‘மூன் டாக்’ அல்லது ‘மாக் மூன்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஒரு வானியல் நிகழ்வு அல்ல, மாறாக வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளியியல் மாற்றமாகும்.
பூமியின் வளிமண்டலத்தில் மிக உயரத்தில் உள்ள மேகங்களில் (Cirrus clouds) அறுகோண வடிவத்திலான சிறிய பனிப் படிகங்கள் இருக்கும்.
நிலவொளி இந்த பனிப் படிகங்கள் வழியாக ஊடுருவிச் செல்லும்போது, அந்தப் படிகங்கள் ஒரு சிறிய 'பிரிசம்' (Prism) போலச் செயல்பட்டு ஒளியை வளைக்கின்றன.
இவ்வாறு வளையும் ஒளியினால், உண்மையான நிலவிற்கு இருபுறமும் பிரகாசமான ஒளிப்புள்ளிகள் தோன்றுகின்றன. இது பார்ப்பதற்கு வானில் பல நிலவுகள் இருப்பது போன்ற மாயையை உருவாக்குகிறது.
இத்தகைய நிகழ்வுகள் ரஷ்யா போன்ற கடும் குளிர் நிலவும் பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தற்போது நிலவும் கடுமையான உறைபனி மற்றும் வளிமண்டல குளிர்ச்சி காரணமாக, மேகங்களில் பனிப் படிகங்கள் அதிகமாக உருவானதே இந்த நான்கு நிலவுகள் தோன்றக் காரணமாக அமைந்தது.