பயங்கரவாத அமைப்புகளின் புகலிடம், பாகிஸ்தான் - ஐ.நா. சபையில் இந்தியா கடும் தாக்கு

பயங்கரவாத அமைப்புகளின் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது என்று ஐ.நா. சபையில் இந்தியா விமர்சித்தது.
பயங்கரவாத அமைப்புகளின் புகலிடம், பாகிஸ்தான் - ஐ.நா. சபையில் இந்தியா கடும் தாக்கு
Published on

நியூயார்க்,

ஐ.நா.வில் சமீபத்தில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பியது. சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து, காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அந்த மாநில மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியது.

இந்நிலையில், இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச்சபையில், சமூகம், மனிதநேயம், கலாசாரம் ஆகியவை தொடர்பான மூன்றாவது குழுவின் விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதன்மை செயலாளர் பவுலோமி திரிபாதி பேசியதாவது:-

உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்புவதற்காக, மனித உரிமை பிரச்சினைகளை தவறாக பயன்படுத்துபவர்களால்தான், மனித உரிமை பிரச்சினைகளின் நம்பகத்தன்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது.

ஒன்றன்பின் ஒன்றாக, எங்கள் நாட்டின் உள்விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்புகிறார்கள். உண்மை என்னவென்றால், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உலகம் முழுவதும் வேதனையில் துடிக்கிறார்கள். ஆனால், அந்த நாட்டில், பயங்கரவாத அமைப்புகளுக்கு பெரும் ஆதரவு கிடைக்கிறது. அந்நாட்டை அவர்கள் பாதுகாப்பான புகலிடமாக கருதி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இத்தகைய வஞ்சகமான தந்திரத்தை உலக நாடுகள் எத்தனையோ தடவை நிராகரித்துள்ளன. இதெல்லாம் பிராந்திய ஆசைகளை மனதில் கொண்டு செய்யப்படும் முயற்சி ஆகும். இதுபற்றி மேற்கொண்டு நாங்கள் பேச விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com