நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’... டெலிகிராம் உரிமையாளர் பாவெல் காட்டம்

வினாத்தாள்களை கொண்டு செல்ல இந்திய விமான படையின் உதவியுடன் மத்திய அரசு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு; ‘தேர்வு முகமையின் நபர்களுக்கு பதிலாக’... டெலிகிராம் உரிமையாளர் பாவெல் காட்டம்
Published on

நியூயார்க்

இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவ மாணவிகள் சேர்ந்து படிப்பதற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நடப்பு ஆண்டின் மே 3-ந்தேதி நாடு முழுதும் நடந்தது. 22 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது.

ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்து, விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் நடந்து முடிந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.

நீட் மறுதேர்வு

நீட் மறுதேர்வு, வருகிற 21-ந்தேதி நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. வினாத்தாள்கள் மீண்டும் கசியாமல் இருக்க இந்த முறை பல அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மறுதேர்வை முன்னிட்டு, வினாத்தாள் தயாரிப்பாளர்கள், மதிப்பீட்டாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள், இன்டர்நெட் வசதி இல்லாத ரகசிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

டெலிகிராம் செயலி

இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையின் கோரிக்கையை ஏற்று, நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. மே 3-ல் நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே டெலிகிராம் செயலியில் பரவியதால் தற்போது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

தகவல் தொழில்நுட்ப சட்டம் (ஐ.டி. சட்டம்), 2000-இன் பிரிவு 69A-ன் அவசரகால விதிகளை பயன்படுத்தி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், டெலிகிராமில் ஏற்கெனவே அனுப்பப்பட்ட செய்திகளை திருத்தும் வசதியை (message-editing feature) வருகிற 30-ந்தேதி வரை முடக்குமாறு அந்த தளத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

15 கோடி இந்தியர்கள்

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்துள்ளதுபற்றி அதன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பாவெல் துரோவ் கூறும்போது, சில பயனாளர்கள் வினாத்தாள்களை கசிய விட்டதற்காக இந்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், டெலிகிராமுக்கு ஒரு வார காலத்திற்கு தடை விதித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், தேர்வுக்கான தகவல்களை கசிய விட்ட தேர்வு நடத்தும் முகமையில் உள்ள நபர்களுக்கு பதிலாக, இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் கூடுதலான டெலிகிராம் பயனாளர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்த தடையால் எதுவும் நிற்க போவதில்லை. டெலிகிராம் தவிர்த்த பிற செயலிகள் மூலம் வினாத்தாள் கசிவுகள் உள்ளிட்டவை நடைபெற போகின்றன என்று காட்டத்துடன் கூறியுள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

இந்தியாவில் நீட் மறுதேர்வு நடைபெறும் 18 மண்டலங்களை சேர்ந்த மையங்களுக்கான வினாத்தாள்களை கொண்டு செல்ல இந்திய விமான படையின் உதவியுடன் மத்திய அரசு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com