2027-ல் ஓய்வு: மெக்சிகோவில் கடைசிப் போட்டி - மல்யுத்த ஜாம்பவான் ரே மிஸ்டீரியோ அறிவிப்பு

மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ரே மிஸ்டீரியோ
Published on: 

ஹூஸ்டன்,

மல்யுத்த உலகின் புகழ்பெற்ற வீரரான ரே மிஸ்டீரியோ, 2027-ம் ஆண்டு தனது கடைசிப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

வெளியான அறிவிப்பு

அமெரிக்காவின் ஹூஸ்டனில் நவம்பர் 28-ம் தேதி நடைபெற்ற WWE சர்வைவர் சீரிஸ்: வார்கேம்ஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடந்த போஸ்ட்-ஷோவில் ரே மிஸ்டீரியோ தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

2027-ம் ஆண்டு தனக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், ஜூன் 12-ம் தேதி மெக்சிகோ சிட்டியில் உள்ள பனோர்டே மைதானத்தில் தனது கடைசிப் போட்டி நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து WWE நிறுவனமும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரே மிஸ்டீரியோவின் கடைசிப் போட்டி குறித்த விவரங்களை வெளியிட்டது. இருப்பினும், அந்தப் போட்டியில் அவரை எதிர்கொள்ளப் போகும் வீரர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

1989-ல் தொடங்கிய மல்யுத்தப் பயணம்

ரே மிஸ்டீரியோ தனது 14 வயதில், 1989-ம் ஆண்டு தொழில்முறை மல்யுத்தப் பயணத்தைத் தொடங்கினார். மெக்சிகோவின் பாரம்பரிய மல்யுத்த பாணியான 'லுச்சா லிப்ரே'வை உலகளவில் பிரபலப்படுத்திய வீரர்களில் ஒருவராக அவர் அறியப்படுகிறார்.

2002-ம் ஆண்டு WWE-ல் அறிமுகமான அவர், மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2006-ம் ஆண்டு ராயல் ரம்பிள் போட்டியிலும் வெற்றி பெற்றார். மேலும், மூன்று முறை யுனைடெட் ஸ்டேட்ஸ் சாம்பியன், இரண்டு முறை இன்டர்காண்டினென்டல் சாம்பியன், ஐந்து முறை டேக் டீம் சாம்பியன் பட்டங்களையும் கைப்பற்றியுள்ளார்.

'619'

வண்ணமயமான முகமூடிகளுக்கும், தனித்துவமான மல்யுத்தப் பாணிக்கும் பெயர் பெற்றவர் ரே மிஸ்டீரியோ. குறிப்பாக, '619' என்ற அவரது பிரத்யேக நகர்வு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

மல்யுத்தத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, 2023-ம் ஆண்டு WWE ஹால் ஆப் பேமில் சேர்க்கப்பட்டார். தற்போது தனது கடைசிப் போட்டியை அறிவித்திருப்பதால், அந்த போட்டி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

X