

மும்பை,
மும்பையில் கனமழை பெய்து வருவதால் கடற்கரைகளில் அலை சீற்றம் அதிக மாக காணப்பட்டது. நேற்று பிற்பகல் 2.50 மணி அளவில் கடலில் 4.26 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலை கரையை தாக்கியது. இதனால் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.
இருப்பினும் கடல் அலையை ரசிக்க ஏராளமான மக்கள் மெரின்லைன், கிர்காவ், வெர் சோவா, பகுதிகளில் கூடினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். முக்கியமாக மும்பையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘கேட்வே ஆப் இந்தியா’ பகுதியில், கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. கடல் அலை பயங்கர வேகத்தில் கரையை தாக்கியது.
இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.22 மணி அளவில் ராட்சத அலை எழும்பி கரையை தாக்க உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்பாக உள்ளதால் பலத்த காற்று காரணமாக ராட்சத அலை தாக்கும் சமயத்தில் கடற்கரைகளில் இருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.