ரூ.765 கோடி மோசடி விவகாரம்; இந்திய தொழில் அதிபர் துபாயில் சிக்கினார்

ரூ.765 கோடி மோசடி செய்த விவகாரத்தில் இந்திய தொழில் அதிபர் துபாயில் சிக்கினார்.
ரூ.765 கோடி மோசடி விவகாரம்; இந்திய தொழில் அதிபர் துபாயில் சிக்கினார்
Published on

துபாய்,

துபாயைச் சேர்ந்த பசிபிக் கண்ட்ரோல்ஸ் சிஸ்டம்ஸ் என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 370 மில்லியன் திரம்ஸ் (சுமார் ரூ.765 கோடி) மோசடியாக கையாடல் செய்யப்பட்டதும், கம்ப்யூட்டர்களில் உள்ள சில முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடிக்கு அந்த நிறுவனத்தின் நிதி மேலாளராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த சீனிவாசன் நரசிம்மன் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் 2016-ம் ஆண்டில் அவரும், அந்த நிறுவனத்தின் மூத்த கணக்கு அதிகாரிகளான இந்தியாவைச் சேர்ந்த பினோ சிரக்காடவில் அகஸ்டின், சிஜூ மேத்யூ, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜாக்குலின் சான் மபோய் ஆகியோரும் துபாயில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களில், தொழில் அதிபரான சீனிவாசன் நரசிம்மனுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துகள் உள்ளன. சீனிவாசன் நரசிம்மனுக்கும், அவரது மனைவிக்கும் நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் சொந்தமாக எஸ்டேட் இருப்பதாகவும், தற்போது அவர் 100 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பர சொகுசு விடுதி கட்டி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. இந்த மோசடி தொடர்பாக அவர்கள் மீது துபாய் போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், சீனிவாசன் நரசிம்மன் ரகசியமாக துபாய்க்கு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. துபாயில் உள்ள ஆவணங்கள் மையம் ஒன்றில் சீனிவாசன் நரசிம்மனை பசிபிக் கண்ட்ரோல்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் பார்த்து உள்ளார். துபாயில் உள்ள தனது சொத்துகளை விற்பதற்காக சீனிவாசன் நரசிம்மன் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சீனிவாசன் நரசிம்மனை விசாரணைக்காக துபாய் அதிகாரிகள் பிடித்துச் சென்று இருப்பதாகவும், அவருக்கு பயண தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அவர் துபாயில் இருந்து இனி வெளியேறவோ, வழக்கு விசாரணையில் இருந்து தப்பவோ முடியாது என்றும் அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com