

மாஸ்கோ
ரஷியாவில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பெண் உள்பட 3 பேர் மரணம் அடைந்தனர்.
ரஷியாவின் மாஸ்கோ நகரில் குத்ரின்ஸ்கயா சதுக்கம் பகுதியில் பால்ஜி ரோஸி என்ற பெயரில் உணவு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், தனியார் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதற்காக பலர் திரண்டு வந்திருந்தனர்.
அப்போது பெண் ஒருவர் அந்த உணவு விடுதிக்கு சென்றுள்ளார். சந்தேகத்தின்பேரில் அதன் பாதுகாவலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த சமயத்தில், அந்த பெண் திடீரென உடலில் கட்டி வந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார்.
இந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் அந்த பெண், பாதுகாவலர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை அந்நாட்டின் உள்விவகார அமைச்சகமும் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. தாக்குதலுக்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டு இருக்க கூடும் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.