உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது தொடர்ந்து 2-வது நாளாக ரஷியா தாக்குதல்

துறைமுக நகரமான ஒடேசா மீது குறிவைத்து 2-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது தொடர்ந்து 2-வது நாளாக ரஷியா தாக்குதல்
Published on

கீவ்,

ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. உலகின் பல நாடுகளுக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசியமான உணவு பொருட்களை உக்ரைன் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், இந்த போர் காரணமாக தானிய ஏற்றுமதி நின்று மிகப்பெரிய உணவு நெருக்கடி உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

இதை தவிர்க்க கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. 'கருங்கடல் தானிய ஒப்பந்தம்' எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷியா சம்மதித்தது. இதன்படி அந்த கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாது.

அதன்படி உக்ரைன் நாட்டின் துறைமுகங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்லப்படும் கப்பல்கள் மீது ரஷியா தாக்குதல் நடத்தக்கூடாது என கூறப்பட்டது. அதே சமயம் ரஷியாவும் உணவுப்பொருட்கள் மற்றும் உரங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆனால் தங்களது உணவுப்பொருட்களை கப்பலில் அனுப்புவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. எனவே தங்களது கோரிக்கை ஏற்கப்படும் வரை இந்த கருங்கடல் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷியா திடீரென அறிவித்தது. இதனால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என ஐ.நா. மற்றும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடேசா மீது குறிவைத்து 2-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் 25 டிரோன்கள் மற்றும் 6 கப்பல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து நேற்றிரவு உக்ரைனின் தெற்கு ஒடேசா பகுதியில் ரஷியா தாக்குதல்களை நடத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com