உக்ரைன் சிறை மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல் - பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

உக்ரைன் சிறை மீது ரஷியா ராணுவம் ஏவுகணை வீசி சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளது.
உக்ரைன் சிறை மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல் - பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
Published on

கீவ்,

ஐரோப்பிய ராணுவ கூட்டமைப்பான 'நேட்டோ'வில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது போர் தொடங்கி தாக்குதல் நடத்தி வருகிறார். இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி மற்றும் ஆயுதங்கள் வழங்கி வருகிறது.

ரஷியாவுக்கு வடகொரியா உதவுகிறது. சீனா மறைமுகமாக உதவுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். போரை உடனடியாக கைவிட வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட உலக அரசியல் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் 3 ஆண்டுகளாக போர் தாக்குதல் தொடர்கிறது.

இந்தநிலையில் ரஷிய ராணுவத்தினர் உக்ரைனை குறிவைத்து நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடத்தினர். தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து இஸ்கந்தர் ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அந்த சிறைச்சாலை கட்டிடம் தூள் தூளாக சிதைந்தது. இந்த கோர தாக்குதலில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17  கைதிகள் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தநிலையில், தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிறைச்சாலையில் இருந்து பலர் தாக்குதலை பயன்படுத்தி தப்பியோடினர்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதலை உடனடியாக நிறுத்த கெடு விதித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவில், "இனி காத்திருப்பதில் பலன் இல்லை. புதினின் நடத்தையில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை. ரஷிய மக்களை நான் நேசிக்கிறேன். ஆனால் புதினுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட நான் தயாராக இல்லை" என்றார்.

மேலும் அவர், "அடுத்த 12 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா முழுமையாக கைவிட வேண்டும். இல்லையெனில் ரஷியா மீது பயங்கர வரிவிதிப்பு விதிக்கப்படும்" என்றார். முன்னதாக கடந்த 14-ந் தேதி அடுத்த 50 நாட்களுக்குள் ரஷிய போர் தாக்குதலை நிறுத்தாவிட்டால் பயங்கரவிளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com