தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதற்கு ரஷ்யா பதிலடி: இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்

தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாக இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. #Russia
தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதற்கு ரஷ்யா பதிலடி: இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்
Published on

மாஸ்கோ,

ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). இவர் சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு இங்கிலாந்து மீட்டு அடைக்கலம் கொடுத்தது. தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் இங்கிலாந்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ரஷியா இருக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷியாவே பொறுப்பு என இங்கிலாந்து கூறிஉள்ளது.இதையடுத்து, ரஷ்ய தூதரக அதிகாரிகள் 23 பேரை வெளியேற்ற முடிவு செய்து இருப்பதாக வியாழன்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவும் 23 பிரிட்டன் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக அதிரடியாக அறிவித்து உள்ளது. அதேபோல், பிரிட்டிஷ் கவுன்சில் செயல்பாடுகளையும் முடக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பதட்டம் அதிகரித்து உள்ளது. வெளியேற்றப்பட்டுள்ள தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற ஒருவார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com