உக்ரைனின் ஒடேசா நகரம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 3 பேர் உயிரிழப்பு

உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியதில் இருந்து ஒடேசா நகரம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
உக்ரைனின் ஒடேசா நகரம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 3 பேர் உயிரிழப்பு
Published on

கீவ்,

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய உக்ரைன்-ரஷியா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷியாவின் தாக்குதல்களை மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியோடு உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது.

உக்ரைன் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்பதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது. அண்மையில் ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏழு கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்தது.

இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷிய ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனில் உள்ள ஒடேசா நகரம் மீது கருங்கடலில் இருந்து போர்க்கப்பல்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு கலிபர் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டன. ஒரு ஏவுகணை அங்குள்ள உணவுக்கிடங்கின் மீது விழுந்து வெடித்துச் சிதறியது.

இந்த தாக்குதலில் உணவுக்கிடங்கின் ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதே போல் ஒடேசா நகரின் மற்றொரு பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், 6 பேர் படுகாயமடைந்தனர்.

கருங்கடலின் அருகே அமைந்துள்ள ஒடேசா நகரமானது உக்ரைன்-ரஷியா போர் தொடங்கியதில் இருந்து கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு முன்பு இந்த நகரம் உக்ரைன் மற்றும் ரஷிய மக்களுக்கு விருப்பமான விடுமுறைக்கால சுற்றுலா தளமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com