

கீவ்:
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் வெடிச்சத்தங்கள் கேட்ட நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மெட்ரோ ரெயில் நிலையங்களில் தஞ்சமடைந்தனர். இதற்கிடையே, ரஷியா மிகப்பெரிய புதிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெலன்ஸ்கி கூறியதாவது: ரஷியாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைன் விமானப்படையும் பாதுகாப்புப் படைகளும் தயாராக உள்ளன. உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வான் பாதுகாப்பு சாதனங்களை வழங்குவதில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நட்பு நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் ” என்றார்.
இதனிடையே, நேற்று முன் தினம் இரவு மாஸ்கோ நகரை நோக்கி 650-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய வான் பாதுகாப்புப் படைகள் அவற்றில் பெரும்பாலானவற்றை இடைமறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் 2022 ஆம் ஆண்டு மோதல் போர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களாக இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ளது. ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும், தற்போது வரை போர் முடிவுக்கு வந்தபாடில்லை.